நாளை
(18) வியாழக்கிழமை நடைபெறவிருந்த கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினையும் இணைத்து கல்முனை பிராந்திய சுகாதார
சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டம் நாளை (18) வியாழக்கிழமை இடம்பெறாது என உத்தியோகபூர்வமாக அம்பாறை
மாவட்ட செயலகம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு
பிரதேச செயலகங்களையும் இணைத்து ஒரு கூட்டம் நாளை 18 ஆம் தேதி நடத்தப்படும்
என ஏற்கனவே அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரமவால்
அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்கள் திட்டமிட்டு பல ஆண்டுகளாக
பறிக்கப்பட்டு வந்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான
அதிகாரங்கள் வழங்கப்பட்டு இதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என இந்த
அரசாங்கத்திடமும் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைத்து
வந்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு தனியாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றிருந்தது.
இருந்தபோதிலும்
இரண்டு பிரதேச செயலகங்களையும் இணைத்து ஒரு கூட்டம் நாளை 18 ஆம் தேதி
நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த
அறிவிப்பானது தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த கல்முனை வடக்கு பிரதேச
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி
இருந்தது.
இது தொடர்பாக
கல்முனை வடக்கு பிரதேச மக்கள் பொது அமைப்புக்கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும்
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தந்தி மூலமாகவும்
தமது எதிர்ப்பை அதிருப்தியை தெரியப்படுத்தியிருந்தனர். அத்துடன் தேசிய
மக்கள் சக்தியின் உள்ளூர் அரசியல் செயற்பாட்டாளர்கள் தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் உயர் மட்டங்களுக்கு மக்கள் கருத்துக்களை தெரியப்படுத்தியும்
இருந்தனர்.
அத்துடன் தமிழ்
கட்சி உள்ளூர் பிரதிநிதிகளும் ( தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள்
முன்னணி ) ஊடகங்கள் ஊடாகவும் தமது அதிருப்திகளை வெளிப்படுத்தியிருந்தனர்
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
( வி.ரி. சகாதேவராஜா)