கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
அதன்படி,
கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்து, இரு
நாட்டு உறவுக்கு விரோதமானது எனவும் இந்த விடயத்தில் மத்திய அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா்
வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனைக்
கூட்டம் நடத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து கச்சத்தீவு இலங்கைக்கு உரியது,
அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா்.
அனுரகுமார
திசாநாயக்கவின் இந்தப் பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலு
சோ்க்காது. இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும்
செயலாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
கச்சத்தீவு மற்றும் தமிழக
கடற்றொழிலாளர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக
கடற்றொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும்
உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு கருத்திற்கொள்ள
வேண்டும்.
தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும்,
கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமையை
நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்
தெரிவித்துள்ளாா்.
இதேவேளை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்
தி.வேல்முருகனும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்கு
கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை
ஜனாதிபதியின் திமிர்ப்பேச்சு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைக்கும்,
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாகச் சவால்விடும் அகந்தை
மிகுந்தப் பேச்சாகும். கச்சத்தீவு தமிழர்களின் உரிமை நிலம்.
இலங்கை ஜனாதிபதியின் பேச்சுக்கு மத்திய அரசும், அமைச்சர்களும் மௌனம் சாதிப்பது வரலாற்றின் பெரும் துரோகம்.
எனவே,
கச்சத் தீவை மீட்டெடுக்க சட்ட, அரசியல் நடவடிக்கைகளை மத்திய, மாநில
அரசுகள் உடனடியாக தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி
போராட்டங்கள் நடத்துவோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.