அதிக பெறுமதியான போதைப்பொருளை நாட்டுக்குள் மிகச் சூட்சுமமாகக் கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய இருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டனர்.சுமார் ஐந்து கோடி பெறுமதியான குஷ் போதைப் பொருளை, இவர்களிருவரும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று (23) செவ்வாய்க்கிழமை கைதாகினர். தாய்லாந்தின் பொங்கொக் நகரில் இந்த போதைப்பொருளை இவர்கள் கொள்வனவு செய்த இவர்கள் , இந்தியாவின் புது டெல்லிக்குச் சென்று, ஏர் இந்தியா விமானம் AI-277 ஊடாக நேற்றுக் காலை 6.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கொழும்பைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரும் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த 48 வயதான நபருமே இதன்போது கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





