மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உளவியல் ரீதியான புரிந்துணர்வு பற்றிய விழிப்புணர்வு இன்மையே ஆசிரியர்ளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றன.
இதன் காரணமாக ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதுடன் அதிகளவிலான மாணவர்கள் பிறழ்வான நடத்தைகளுக்கும் ஆளாகும் நிலையும் காப்படுகிறது.
எது எவ்வாறாக இருப்பினும் கல்வி கற்ற சமூகத்தின் ஊடாகவே புரிந்துணர்வு தொடர்பான விழிப்புணர்வை அரச, அரசசார்பற்ற அலுவலகங்களுக்கும் ஏனைய பொது அமைப்புக்கள் சமூக மட்டம் என அனைவருக்கும் வழங்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
அதற்கான ஆக்கபூர்வமான உளவியல்சார் பயிற்சிகள் ஒவ்வொருவரும் பெற்று உளநலமுள்ள சமூதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியம் தேவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை .
அதிலும் நாளைய தலைமுறையினரை உருவாக்கும் பாடசாலை சமூகத்தினர் உளவியல் கல்வியை பெற்று மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் புரிந்துணர்வு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருப்பது காலத்தின் தேவையாக இன்று காணப்படுகின்றது.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும், உளநல சமூக வலுவூட்டல் வளவாளருமான திரு. செமபாலை பிரான்சிஸ் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கும்,மாணவர்களின் கல்வி முன்னேற்ற வளர்ச்சிக்கும் , பெற்றோர் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக கொழும்பு MIU பல்கலைக்கழகம் (UGC) உளவியல் கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகளை இலங்கையில் பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றது.
இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிலும் வலையக்கல்வி பணிமனையின் அனுமதியுடன் மேற்படி வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றன.
அந்தவகையில் மட்டக்களப்பு மேற்கு, கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் 26.09.2025 அன்று பாடசாலையின் அதிபர் திரு.T.கரிகாலன் அவர்களின் தலைமையில் , உளவளத்துணை ஆசிரியை திருமதி. குமுதினி மயில்வாகனம் அவர்களின் ஒழுங்குபடுத்துதலுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் வழிகாட்டல் விழிப்புணர்வு கல்வி வழங்கப்பட்டது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புரிந்துணர்வு என்பது பிறரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் திறனைக் குறிப்பதுடன் இது உளவியலின் முக்கிய அம்சமாகவும் காணப்படுகின்றது
அதன் அடிப்படையில் உளவியல், மனினுடைய நடத்தை, எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்தப் புரிந்துணர்வை மேம்படுத்துகிறது. அவ்வாறான ஒரு புரிந்துணர்வை கல்வி கற்ற சமூகமாகிய நாம் கற்றுக்கொண்டு பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் வழங்கி நல்ல நடத்தை மாற்ற புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் நெறிபிறழ்வாக நடந்து கொள்ளும் மாணவர்களிலும் மாற்றத்தை கொண்டுவர முடியும் .ஆனால் இது ஒரு சவாலான விடயமாகும்.
பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஆரோக்கியமான உறவுகளை வளர்ப்பதற்கும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் உளவியல் ரீதியான புரிதல் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும். என்றார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மனிதர்கள் எவ்வாறான விஷயங்களைச் செய்கிறார்கள், அவர்களின் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உளவியல் ஆய்வு செய்கிறது.
அந்தவகையில் ஒருவர் தனது எண்ணங்களையும் செயல்களையும் உணர்ந்து, தனது குறைபாடுகளைப் புரிந்துகொண்டு முன்னேற உளவியல் பெரிதும் உதவுகிறது. இது சுய-புரிதலுக்கும் வழிவகுக்கிறது.
உளவியலானது புரிந்துணர்வு மற்றும் ஒழுக்கநெறி , போன்றவற்றையும் உள்ளடக்கியதுடன் நாம் திறம்பட
புரிந்துகொள்ளும் திறனை வளர்க்க உதவும் ஒரு அறிவியலும் ஆகும். மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் இந்த அறிவியல் முக்கிய பங்காற்றி வருகின்றது. அதனை முறையாக கற்று ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஆசிரியர்களை மதித்து செயற்படாத செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள மாணவர்கள் வகுப்பறைகளில் இருப்பார்களாக இருந்தால் அவர்களின் குழப்படியான செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதா ? அல்லது குறித்த பாடத்தில் கவனம் செலுத்துவதா ? போன்ற சவால்களை ஆசிரியர்கள் கொண்டுள்ளதுடன் மன அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் அதனை பக்குவமான முறையில் கையாள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் மூலம் நாம் முன்னெடுத்துள்ள சமூக சேவை அடிப்படையிலான இலவச உளவியல் கல்வி வழிகாட்டலானது விழிப்புணர்வை மாத்திரம் உங்களுக்கு வழங்கிவிட்டு வெறுமனே கடந்து போகும் ஒரு செயல்பாடு அல்ல.
நாட்டின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு தியாக உணர்வுடன் பற்றுக்கொண்டு செய்யும் ஒரு செயலாகும் . ஆகவே அதிபர்கள் விரும்பினால் அதிபர், ஆசிரியர்கள் ஊடாக பெற்றோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த செயல் திட்டத்தை உருவாக்கித் தருவதற்கும் அதனூடாக நெறிபிறழ்வாக நடந்து கொள்ளும் மாணவர்களை நல்வழிப்படுத்தி கன்னன்குடா மகா வித்தியாலயப் பாடசாலையினை உளநலம் நிறைந்த முன்மாதிரி பாடசாலையாக உருவாக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.




.jpeg)

.jpeg)

.jpeg)





