வேலை செய்யுங்கள். உங்களால் வேலை செய்ய முடியாவிட்டால், இழப்பீடு பெறலாம்.- நளிந்த ஜயதிஸ்ஸ

 


மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படவோ அல்லது மின் துண்டிப்பு இடம்பெறவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊழியர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யும் எண்ணம் எமக்கு இல்லை.

எவராவது  வெளியேற விரும்பினால், போதுமான இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படும். மாற்றங்களுக்கு உடன்படாதவர்கள் வெளியேறவும்  இடமளிக்கப்படும் என்றும் அமைச்சர்  கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்;

தொடர்ச்சியான மின்சார விநியோம்  உறுதி செய்யப்படும்.  இதற்குத் தேவையான நடவடிக்கைகளை  எடுப்பதில் அரசாங்கம்  உறுதியாகவுள்ளது. அரசாங்கம் எந்த நாச வேலைகளுக்கும் இடமளிக்காது. அப்படி ஏதாவது நடந்தால், சட்டம்  கடுமையாக  அமுலாக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படாவிட்டால் நாடு நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும்.’பொதுமக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்றால் மறுசீரமைப்பை நாம் மேற்கொள்ள வேண்டும். முன்னைய அரசாங்கம் 50 வீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து மின்சார சபையை தனியார்மயமாக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், நாம் அதை நான்கு நிறுவனங்களாகப் பிரித்து, அவற்றை அரசு நிறுவனங்களாகவே தக்க வைத்துக் கொண்டுள்ளோம் நிறுவனங்கள் நூறு வீதம் திறை சேரி செயலாளருக்குச் சொந்தமானவை.  நான்கு நிறுவனங்கள் மிகவும் சட்டப்பூர்வமாக உருவாக்கப்படுகின்றன. மின்சார உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் செயல்பாடுகள் என்ற ரீதியில்  நான்கு  நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. இது தவறு என்று யாரும் கூற முடியாது. கூடுதலாக, இந்த மாற்ற செயல்முறையை மேற்கொள்ள 02 தற்காலிக நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, இதில் எந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யும் திட்டம் எங்களிடம் இல்லை. யாராவது இந்த நிறுவனங்களில் சேர விரும்பவில்லை என்றால், அவர்கள் வெளியேறலாம்.

அவர்களுக்கு 09 லட்சம் முதல் 50 லட்சம் ரூபா  வரை இழப்பீடு வழங்கப்படும். மின்சார  விநியோகத்தை  அரசாங்கம்   அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளது.  தயவுசெய்து வந்து வேலை செய்யுங்கள். உங்களால் வேலை செய்ய முடியாவிட்டால், இழப்பீடு பெறலாம். இலங்கை மின்சார சபையை ஒரு சிறிய அரசு நிறுவனமாக மாற்றுவதும், பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதுமே  அரசாங்கத்தின் குறிக்கோள். தனியார் மயமாக்கும் எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை.   இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக  மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக  எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடி குறித்து ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.