இந்தியாவில் இளங்கோவடிகள் விருது பெறும் முதலாவது ஈழத் தமிழர் பேராசிரியர் சாந்தி கேசவன்



 சிலம்பொலி செல்லப்பன் 
சிலப்பதிகார அறக்கட்டளை நடாத்தும் "சிலப்பதிகாரப் பெருவிழா" நிகழ்வானது 21.09.2025ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) தமிழ் நாட்டின் நாமக்கல் நகரில் நடைபெறவுள்ளது.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இடம்பெறும் இந்நிகழ்வில் தமிழ்த்தொண்டாற்றிய பேரறிஞர்களுக்கு "இளங்கோவடிகள் விருது " வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்படுவது வழக்கமாகும். சிலப்பதிகாரப் பெருவிழாவில்  முதலாவது இளங்கோவடிகள் விருதினை தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பெற்றிருந்தார். அந்த வரிசையில்  2025ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருதானது, முதன்முறையாக வெளிநாட்டுத் தமிழர் ஒருவருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் மேனாள் துறைத் தலைவராக அரும்பணியாற்றிய  பேராசிரியர், முனைவர் சாந்தி கேசவன் அவர்கள் கல்வித்துறையிலும் பொதுத்துறையிலும் பலதரப்பட்ட ஆய்வுகளை வெளியிட்டு தமிழுக்கும், சைவத்துக்கும் சிறப்பினை சேர்த்துள்ளார்.  "மட்டக்களப்புத் தமிழகத்தில் கண்ணகி வழிபாடு -  பல் பரிமாண நோக்கு" என்ற தலைப்பில் அவர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிட்ட நூல், அறிஞர்  உலகில் பரவலாக வரவேற்பைப் பெற்றிருந்தது.  தமிழகத்தின் பூம்புகார் முதற்கொண்டு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பாணமை வரை  பரந்த நிலப்பரப்பில் நீடிக்கும் கண்ணகி வழிபாடு பற்றி களப்பயணம் செய்து இதுவரை வெளிவராத  பாடல்கள்,பத்ததிகளையும் (பத்தாசிகள்)பல புதிய கண்ணகை அம்மன் கோயில்களையும் தேடிப் பதிவு செய்துள்ளதுடன்
மட்டக்களப்பு மக்களின் உளவியல் சார் தத்துவக் கருத்தியல்களுடன் விரிவாக ஆய்வு செய்து , காத்திரமான தகவல்களை முதன்முதலில் வெளியிட்ட அந்நூல் 2021ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த ஆய்வு நூலுக்கான விருதினையும் தட்டிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
இதன் சிறப்புக் காரணமாக 2024 ம் ஆண்டு மீள் பதிப்புச் செய்ததுடன் 2025 மார்ச் மாதம் சென்னையில் தமிழறிஞர் புலியூர் கேசிகன் அறக்கட்டளை  மீண்டும் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழிலக்கியத்துக்கும் சிலப்பதிகாரம் சார் இலக்கியங்களுக்கும் பெருந்தொண்டாற்றியவர் என்ற ரீதியில் தமிழகத்துக்கு வெளியே "இளங்கோவடிகள் " உயரியவிருதும், ஐம்பதாயிரம் இந்திய ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும் முதல் வெளிநாட்டவராக மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த பேராசிரியர் சாந்தி கேசவன் அவர்கள் கௌரவிக்கப்படுகின்றமை முழு இலங்கைப் புலமைச் சமூகமும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். இவர் கல்விசார் நூல்கள், ஆய்வு  நூல்கள் உட்பட இருபத்து நான்கு  நூல்களை வெளியிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்ற பேராசிரியர் முனைவர் சாந்தி கேசவனை மட்டக்களப்பு மண் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது.