புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிரான கிராம மக்கள், பொது அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று மாலை மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நடைபெற்றது.
கடந்த 2018ம் ஆண்டு இவ்வாறு தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது தற்போது அதனை வேறு ஒருவர் அக்காணியை கொள்வனவு செய்து கைவிடப்பட்ட தண்ணீர் தொழிற்சாலையினை அவர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த தண்ணீர் தொழிற்சாலை இங்கு வந்தால் தங்களது பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைவடைவதுடன் குடிப்பதற்கோ அல்லது விவசாய நடவடிக்கைகள் மற்றும் கால்நடை மீன்பிடி போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் இதனால் அப்பகுதி வறண்ட பகுதியாக மாறிவிடும் என அச்சத்தின் காரணமாக இந்த தண்ணீர் தொழிற்சாலை வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அப்பகுதி மக்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்கள், துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் ஒன்றுகூடி இந்த தண்ணீர் தொழிற்சாலை வருவதனை தடுப்பது தொடர்பிலும் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு இதற்கு அரசு தலையிட்டு இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்ததுடன் இவ்வாறான செயற்பாடுகள் இப்பகுதியில் இடம்பெறகூடாது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.



.jpeg)








