அமெரிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்புச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் .

 


 

 அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மோர்மன் (Church of Jesus Christ of Latter-day Saints) தேவாலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்புச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டெட்ராய்ட் நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கேயுள்ள கிரான்ட் பிளாங்க் (Grand Blanc) நகர தேவாலயத்தில், ஞாயிறு காலை ஆராதனைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலின் விபரம்
தோமஸ் ஜக்கொப் சான்ஃபோர்ட் (Thomas Jacob Sanford) என அடையாளம் காணப்பட்ட 40 வயதான சந்தேகநபர், தனது வாகனத்தை தேவாலயத்தின் பிரதான வாசலில் மோதி, அதனூடாக உட்புகுந்துள்ளார். பின்னர் அவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளதுடன், பெற்றோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தி தேவாலயத்திற்குத் தீ வைத்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்த முதற்கட்ட அவசர அழைப்புக் கிடைத்த எட்டு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றுள்ளதாக கிரான்ட் பிளாங்க் நகர பொலிஸ் தலைமை அதிகாரி வில்லியம் ரென்யே (William Renye) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

 

காயமடைந்தவர்கள் நிலை
சம்பவத்தில் காயமடைந்த எட்டுப் பேரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஏழு பேர் சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தினால் தேவாலயம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளமையால், கட்டடத்தின் சிதைவுகளுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபரின் வீடு மற்றும் தொலைபேசித் தரவுகளை ஆய்வு செய்யும் பணிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக விசாரணையாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

அரச தலைவர்களின் கண்டனம்
வழிபாட்டுத் தலங்களில் நிகழும் இவ்வாறான வன்முறைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ள மிச்சிகன் மாநில ஆளுநர் கிரெட்சன் விட்மர், இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இக்கொடூரச் சம்பவத்தை அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.