நேபாளத்தில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 7,500 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை சாதகமாகப் பயன்படுத்தி, அந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 7,500 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
திலிபசார் சிறையிலிருந்து 1,100 கைதிகளும், சிட்வான் சிறையிலிருந்து 700 கைதிகளும், நக்பு சிறையிலிருந்து 1,200 கைதிகளும் தப்பிச்சென்றுள்ளனர். 
 
மேலும், சன்சாரி ஹி ஜும்ப்கா சிறையிலிருந்து 1,575 கைதிகள், காஞ்சன்பூர் சிறையிலிருந்து 450 கைதிகள், கைலாலி சிறையிலிருந்து 612 கைதிகள், ஜலேஷ்வர் சிறையிலிருந்து 576 கைதிகள் மற்றும் கஸ்கி சிறையிலிருந்து 773 கைதிகள் என 7,500 மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. 
 
நேபாளத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட அமைதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக நேபாள ஊடகவியலாளர் கிரிஷ் கிரி எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார். 
 
சமூக ஊடகத் தடை மற்றும் அரசாங்க ஊழலுக்கு எதிராக நடந்து வரும் அமைதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி, இவ்வாறு ஏழு சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
இன்று காலை முதல் அமைதியை நிலைநாட்ட இராணுவம் தடை உத்தரவுகளை விதித்துள்ளதாகவும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
நேபாள இராணுவம் தெருக்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஒலிபெருக்கிகள் மூலம் உத்தரவுகளைப் பிறப்பித்து, பதட்டமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இதேவேளை காத்மண்டுவில் உள்ள திலிபசார் சிறையில் இருந்த ஏராளமான கைதிகள் தப்பிக்க முயன்றபோது இராணுவ அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 
 
காவல்துறை அதிகாரிகளால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால், தற்போது இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைது செய்ய நேபாள இராணுவம் உட்பட பாதுகாப்புப் படையினர் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.