குற்றத்துக்காக கைதுசெய்யப்படும் சிறார்களை 6 மணி நேரத்துக்குள்,
(நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்பாக) அவர்களின் பெற்றோர்
அல்லது பாதுகாவலரிடம் காண்பிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு
பணிப்புரை விடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தங்க நகை திருட்டு தொடர்பான முறைப்பாட்டுக்கமைய,
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிறுவன் ஒருவர் இரண்டு நாட்களாக,
சட்டவிரோதமாக ஹதரலியத்த காவல்நிலையத்தில் தடுத்துவைத்து
கொடுமைப்படுத்தப்பட்டதன் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக
தீர்ப்பளிக்க கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் நேற்று
வழங்கியிருந்த நிலையில், ஹதரலியத்த காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரி,
குறித்த சிறுவனுக்கும் அவரது பாதுகாவலர்களுக்கும் இழப்பீடு செலுத்த
வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த தீர்ப்பை
அறிவிக்கும்போதே, கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் 6 மணிநேரத்துக்குள்
பெற்றோரிடம் காண்பிக்கப்பட வேண்டும் என்ற பணிப்புரையை காவல்துறையினருக்கு
விடுக்குமாறு உயர்நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டது.