நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகள் இருப்பதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 


நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகள் இருப்பதாகவும் விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் 50 வீதமானவை துல்லியமானவை என்று விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 
 
இன்று (25) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவலை முன்வைத்தார். 
 
உணவுப் பயிர்களைச் சேதப்படுத்தும் விலங்குகளை அடையாளம் காணவும், முறையான ஆய்வை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த விலங்கு கணக்கெடுப்பு மார்ச் 15 ஆம் திகதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 
 
அதே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த விலங்கு கணக்கெடுப்பின் போது, குரங்குகள், மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகியவை குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். 
 
முடிவுகளின்படி, குரங்குகள் மற்றும் மந்திகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50 வீதம் துல்லியமானவை எனவும் தெரிவித்தார். 
 
அதனடிப்படையில் தற்போது நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகளும் 1.7 மில்லியன் மந்திகளும் 2.6 மில்லியன் மர அணில்களும் 4.2 மில்லியன் மயில்களும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.