வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஐந்து மாவட்டங்களில் தியாகி திலீபனி நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மன்னார், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தாயக செயலணியின் ஏற்பாட்டாளர்களால் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
தியாகி திலீபனின் தியாகத்தினையும், தமிழ் மக்களின் போராட்டம் நிறைந்த வரலாறுகளையும் தற்போதைய இளைய சமுதாயத்தினருக்குக் கொண்டு சேர்க்கும் முகமாக விளையாட்டுக் கழகங்களை மையப்படுத்தி அதிலுள்ள இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆர்வத்தினை இனத்தின் வரலாறு புகட்டும் கருவியாக மாற்றும் விதமான உத்தியாக இம்முறைய தாயக செயலணியின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வுகள் மூலம் குறித்த நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டன.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கரப்பந்தாடப் போட்டிகளும்,
திருகோணமலை மாவட்டத்தில் துடுப்பாட்ட போட்டிகளும், வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உதைபந்தாட்டப் போட்டிகளும் என விளையாட்டினை மையப்படுத்தி தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வுகளில் அந்த அந்த மாவட்டத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன் இளைஞர்கள் தங்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியினையும் செலுத்தி வந்தனர்.
குறித்த போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தியாகி திலீபனின் நினைவேந்தல் நாளான இன்றைய தினம் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
போட்டிகளின் ஆரம்பத்தில் தியாகி திலீபனுக்கான ஈகைச்சுரடர் ஏற்றப்பட்டு, கழகங்களின் இளைஞர்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் திலீபன் தொடர்பான வரலாறுகளும் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தாயக செயலணியினரால் முன்னெடுக்கப்பட்டதுடன், வெற்றியீட்டிய கழகங்களுக்கு பெறுமதியான வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்கள் மற்றும் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்




.jpeg)









