30 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி - பாராளுமன்ற உறுப்பினர் பிரபுவினால் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

30 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்த புதூர் மகா விஸ்னு ஆலய வீதிக்கான புனரமைப்பு பணி இன்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிராமங்களை நோக்கிய நிலையான அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகா விஷ்னு ஆலய வீதி புனரமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு இன்று (19) திகதி தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணியின் உப தலைவி திருமதி.பிரேமகாந்தி விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

30 வருடங்களுக்கு மேலாக எந்தவித புனரமைப்பும் இடம் பெறாத குறித்த வீதியானது முதற்கட்டமாக 7.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 500 மீற்றர் தார் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், புதூர் பிரதான வீதியை விஸ்தரிப்பதற்கு 20 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விதி புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமாகிய கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீதி புனரமைப்பு பணியினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.