மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவில் மாபெரும் சிரமதானப் பணிகள் மற்றும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டதுடன் வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் திட்டமிடலுடன், லண்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான மார்க்கண்டு நேசராசா அவர்களின் நேரடிப் பங்களிப்புடன் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
பொறுகாமம் தொடக்கம் கோவில் போரதீவு வரையிலான வீதியின் இருமருங்கிலும் மற்றும் ஸ்ரீ மீனாட்சிக்கட்டு பிள்ளையார் ஆலய வெளிப்புற எல்லைப்புற குளத்தின் இருமருங்கிலுமாக இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிரமதானப் பணியில் கோவில் போரதீவு கிராம பொது மக்கள்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், ஆலய அறங்காவலர் சபையினர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் கமநல அமைப்பின் நிர்வாகிகள், விவசாயிகள், போரதீவுப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வீதிகளின் இருமருங்கிலும் இருந்த குப்பைகள் மற்றும் பற்றைக்காடுகள் அகற்றப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டதுடன் வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.





