பல்கலைக்கழக மாணவி ஒருவரின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் கைது .

 


வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புதன்கிழமை (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் குருணாகல் – மஹவ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரான இளைஞன் போலி முகநூல் கணக்கு ஒன்றின் ஊடாக குறித்த பல்கலைக்கழக மாணவியின் பேஸ்புக் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து தான் கூறுவது போல் செய்யவில்லை என்றால் அதனை சமூக ஊடகங்களில் பகிர்வதாக கூறி மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில்  வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் குருணாகல் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.