செம்மணி மனித புதைகுழி தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம்.

 


செம்மணி மனித புதைகுழி தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
 
உண்மையைக் கண்டறிவதற்கும், சர்வதேசத்துடன் ஒத்துழைத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் அடையாளமாக, செம்மணி புதைகுழியை, அரசாங்கம் கருத வேண்டும் என்று குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 
 
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கிரிஷாந்தி குமாரசுவாமியின் வழக்கில் முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குமூலத்துக்கு அமைய, மீட்கப்பட்ட என்புக் கூட்டுத் தொகுதிகளில், இரண்டு என்புக் கூட்டு தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
அந்த சந்தர்ப்பத்தில், 15 என்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டதுடன் அவை பரிசோதனைகளுக்காக, லஸ்கோ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட போதிலும் அதன் பெறுபேறுகள் இதுவரையிலும் தெரியவரவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். 
 
அதேநேரம், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கிடப்பில் உள்ளது. 
 
இந்தநிலையில், அதனையும், தற்போது செம்மணி மனித புதைகுழி தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள வழக்கையும், ஒன்று சேர்க்க வேண்டும் என்று, தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
 
இந்த கோரிக்கை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளையும் தாம், ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.