70 வயதிலும் தடகள வீராங்கனையாக வலம் வரும் சகுந்தலா பாண்ட்யா

 


குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யாவுக்கு 70 வயதாகிறது. ஆனால் அவர் இப்போதும் ஒரு தடகள வீராங்கனை.

"எனது தடகளப் பயணத்தை நான் 50 வயதில் தொடங்கினேன். 45 வயதில், எனக்கு முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது. இது முழங்கால் மூட்டின் ஜவ்வு கிழிவதால் ஏற்படும் ஒரு நோயாகும். நான் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தபோது, அவர்களில் பெரும்பாலோர் என்னை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார்கள்.

ஆனால் நான் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிராக இருந்தேன். ஒரு பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன். இன்று, நான் ஒரு தடகள வீராங்கனையாக உள்ளேன்." என்று கூறுகிறார் சகுந்தலா பாண்ட்யா.

சமீபத்தில் மலேசியாவில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்று 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் இவர்.

"இது எனக்கு மட்டுமல்ல, எனது நாட்டுக்கும் பெருமையான தருணம். கடந்த இரண்டு ஆண்டுகளில், நான் பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இப்போட்டிகளில் 30 பதக்கங்களை வென்றுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் குறிப்பிட்ட வயதினருக்கான பிரிவு உள்ளது. நான் 65-70 வயது பிரிவில் பங்கேற்கிறேன்." என்று கூறுகிறார் சகுந்தலா பாண்ட்யா.