மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கந்தசாமி பிரபு (பா.உ) அவர்களின் தலைமையில், பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ. இரா. சாணக்கியன்
மற்றும் கெளரவ Dr. இ. ஶ்ரீநாத் ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இப்பிரதேசத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இவ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.