உயிரிழந்த மாணவி தொடர்பில் குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற உயர்ந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் : அல்- மீஸான் பௌண்டஷன் அரசுக்கு கோரிக்கை!
உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் முறையான விசாரணை செய்யப்பட்டு விரைவாக அரசாங்கம் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் மேலும், குறித்த மாணவி தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைதளங்களில் தீர்வை தேட தேவையில்லை என பொறுப்புமிக்கவர்கள் கூறுவது பொறுத்தமற்றது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இப்போதைய அரசாங்கம் இருந்தபோது அவர்களும் இதனையே செய்தார்கள் என்பதை மறந்து பேசுவது கவலையளிக்கிறது.
கொழும்பில் கடந்த 29ம் திகதி 16 வயதான, பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த மாணவி ஒரு பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்றுவந்த நிலையிலேயே ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி பாடசாலைக்கு அறிவித்தும் கூட இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் குறித்த மாணவி பாடசாலையை விட்டு இடைவிலகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல சூழ்நிலையிலேயே சமூக வளைத்தளங்கள் வாயிலாக இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தான் அனைத்து தரப்பினரது கண்களும் திறந்து இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரின் பாராளுமன்ற உரையில் சமூகவலைத்தளங்களினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற கூற்று எமக்கு வேதனையளிக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதற்காக இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு துரித கதியில் நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.