முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள்
மற்றும் அவர்களது உறவினர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில
நாட்களில் ஊழல் மற்றும் அலுவல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் கீழ் கைது
செய்யப்படவுள்ளதாக, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணையத்தின் (CIABOC) தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவல் துஷ்பிரயோகம்,
ஊழல் மற்றும் சட்டவிரோதமாக சொத்து சேகரித்தல் தொடர்பான வழக்குகளில் இந்த
நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது
இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான விசாரணைகள்
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த
சில நாட்களாக, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல அரசியல்வாதிகள் மற்றும்
அவர்களது உறவினர்கள் ஆணையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மற்றுமொரு குழுவினருக்கு அடுத்த சில
நாட்களில் ஆணையத்திற்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்து
சேகரிப்பு தொடர்பான விசாரணைகளை ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. இந்த
வழக்குகளுக்கு தேவையான ஆதாரங்களை சேகரித்தவுடன் கைது நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பல
நிறுவனங்களில் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் கூட்டாக இணைந்து லஞ்சம்
பெறுவதாக (லஞ்சக் குழுக்கள்) அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக ஆணையம்
கடுமையான கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.