வேற்று கிரகத்தில் உயிர்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம், மனிதர்களால் வாழ முடியாது.

 


ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்காக அனைத்து சாதகமான அம்சங்களும் இருப்பதாகவும், எனவே நிச்சம் அங்கு ஏலியன்கள் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த கிரகத்திற்கு K2-18b என பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் புவி விஞ்ஞானி ரேமன்ட் கூறுகையில், “இந்த கிரகம் பூமியை விட 8 மடங்கு பெரியது. அதே நேரம் இது சூரியனை வெறும் 33 நாட்களில் சுற்றி வந்துவிடுகிறது. எனவே இது சூடான கிரகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த கிரகத்தில் கடல்களும் இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் உயிர்கள் இருப்பதை நாம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

 

இந்த கிரகத்தில் டைமிதில் சல்பைடு, டைமிதில் டைசல்பைடு என இரண்டு வேதிச் சேர்மங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சேர்மகங்கள் பூமியில் இருக்கின்றன. கடலில் உள்ள பைட்டோபிளாங்டன் எனப்படும் ஒரு வகை பாசி மூலம்தான் இந்த சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படியெனில் K2-18b கிரகத்திலும் உயிர்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த சேர்மங்கள் தவிர மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களும் இந்த கிரகத்தில் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோள் முழுவதுமாக கடலால் சூழப்பட்டிருக்கிறது. அதிக அளவில் ஹைட்ரஜன் இருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த கோளில் மனிதர்களால் வாழ முடியாது. ஆனால் சிறு சிறு உயிர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இருப்பினும் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் உயிர்கள் இருப்பதற்கு ஆதாரமாக சொல்லப்பட்ட இரண்டு வேதிச் சேர்மங்கள், விண்கற்களில் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் அங்கு ஏன் உயிர்கள் இல்லை? பைட்டோபிளாங்டன் எனப்படும் ஒரு வகை பாசி இல்லாமலேயே கூட மேற்குறிப்பிட்ட இரண்டு வேதி சேர்மங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே இந்த கிரகம் பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது. அப்படி செய்வதன் மூலம் விரைவில் ஏலியன்களின் இருப்பு பற்றி நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.