மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 


மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார்.

மன்னார் பஜார் பகுதியில் வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்ற  தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது.ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த திட்டங்கள்  அனைத்தும்  தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு,சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் முதல்,மேலதிகமாக 4 இலட்சம் நபர்களுக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன்,திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.