மட்டக்களப்பில் சாரணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிப்பு-2024


 

 















 

மட்டக்களப்பில் மழலை சாரணர்கள் மற்றும் குருளை சாரணர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் நடாத்தப்பட்ட முதலாவது மாவட்ட ஒன்று கூடல் மற்றும் இரண்டாவது தேசிய "Kiddoree" இல் பங்கு பற்றிய மழலை சாரணர்கள் மற்றும் குருளை சாரணர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  (23)  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கர்ட்மன் மண்டபத்தில் இடம் பெற்றது.

 மாவட்ட சாரணர் சங்கத்தின் பதில் மாவட்ட ஆணையாளரும், உதவிப் பிரதம ஆணையாளருமான அமிதன் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

இவ் இரு நிகழ்வுகளிலும் பங்குபற்றிய புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிசிலியா பெண்கள் கல்லூரி, வின்சன்ட் உயர் தரப் பாடசாலை, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி, நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மழலை மற்றும் குருளை சாரணர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 இதன் போது  கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாவட்ட சாரணர் நிர்வாகமானது முன்னைய காலங்களை விட மிகவும் சிறப்பாக செயலாற்றுகின்றமையை தாம் நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும், சாரணர் தொகை மதிப்பீட்டின் அடிப்படியில் கடந்த வருடம் 37 சாரணர் மாவட்டங்களில் 16 வது இடத்தில் இருந்ததாகவும் 1839 ஆக காணப்பட்ட சாரணர் மதிப்பீட்டு எண்ணிக்கை இவ்வருடம் 3323 ஆக உயர்ந்துள்ளதாகவும், மாவட்டத்தின் சாரண வளர்ச்சிக்கு எப்பொழுதும் தாம் ஒத்துழைப்பதாக தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளருமான வை. ஜயச்சந்திரன், பட்டிருப்புக் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன்,  இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலய ஆணையாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான பி. சசிகுமார் , மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரான ஆர்.பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.