புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்கால் - சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.