இந்தியா- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தமுதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.