(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) இடம் பெற்றது.
மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் 302 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.
மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு விளையாட்டு மைதானங்களை புனர்நிர்மாணம் செய்தல், பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு 4 மில்லியன் நிதி ஒதுக்கிடு செய்தல், மழை காலங்களில் நீர் தேங்கியிருக்கும் மைதானங்களை தரமுயர்த்துதல், முன் பிள்ளைப் பருவப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
அதிகளவு மக்கள் பாவனை செய்யும் மணல் வீதிகளை துரித கதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கு இதன் போது பணிப்புரை விடுத்தார்.
மேலும் இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்:- மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மீண்டும் செல்லவிடாது துரித கதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என பணிப்புரை விடுத்ததுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 திகதியினுள் அனைத்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.எம் பஸிர், மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி ஆர்.காயத்திரி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், கணக்காளர் எம். வினோத், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.