“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ள எந்தவொரு சிங்கள சமூகத்தை சேர்ந்த வேட்பாளரும் தமிழ் மக்களின் பிரச்னைக்கு திட்டவட்டமான – உறுதியான தீர்வை முன்வைக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது அவசியம்” என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர்.
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் தமிழ் சிவில் அமைப்புகள், வடக்கு – கிழக்கை சேர்ந்த தமிழ்த் தேசிய கொள்கைசார் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சி இது விடயத்தில் இரண்டுபட்டுள்ளது. எனினும், ஒரு பகுதியினர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ளதால் தமிழ் அரசுக் கட்சி பொது இணக்கம் ஒன்றுக்கு வரக்கூடும் என்றும் அவர்கள் இந்தியத் தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், புளொட் கட்சியின் வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேசமசந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் இந்தியத் தூதுவரிடம், “எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிங்கள சமூகத்தைச் சேர்ந்த எந்த
வேட்பாளரும் தமிழ் மக்களுக்கு தீர்க்கமான – திட்டவட்டமான – உறுதியான தீர்வை
வழங்க
முன்வரவில்லை. தமிழ் மக்களின் காணிகள் அபரிக்கப்படுகின்றன. தமிழர்
பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இன விகிதாசாரம்
மாற்றியமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமைகள்
மறுக்கப்படுகின்றன. இந்து ஆலயங்கள் பௌத்த விகாரைகளாக மாற்றப்படுகின்றன.
கடந்த பல காலங்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த செயல்கள் ஜனாதிபதி
ரணிலின் காலத்திலும் தொடர்கின்றன. அவற்றை நிறுத்த அவர் எந்த முயற்சியும்
எடுக்கவில்லை” என்று தெரிவித்தாா்கள்.
“தமிழ் மக்களுக்கு 13ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை தருவேன் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் அதிகாரத்தை வழங்க மறுக்கிறார். மறைந்த தலைவர் இரா. சம்பந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றபோதும் அவர் இதனையே தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாஸவும் தமிழ் மக்களுக்கு தான் வழங்கத் தயாராகவுள்ள அதிகாரங்கள் குறித்து திட்டவட்டமாகக் கூறவில்லை” என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் இந்தியத் துாதுவரிடம் தெரிவித்தனா்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இதனால் அவசியமாகியுள்ளது என்றும் தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர், கடந்த காலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தமிழ் மக்களின் ஆதரவைக் கோருவது சிங்கள வேட்பாளர்களின் வழக்கமாகும். ஆனால், தற்போது தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே – 3 மாதங்களுக்கு முன்னதாகவே சிங்கள வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு அணி திரண்டு வந்து ஆதரவை கோருகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் விவகாரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது” என்றும் குறிப்பிட்டாா்கள்.
சிங்கள வேட்பாளர்களை மாற்றத்துக்கு உட்படுத்தக் கூடியதாகவும் – அவர்கள் தமிழ் மக்களின் பிரச்னைத் தீர்வு விடயத்தில் உறுதியான – திடமான முடிவு எடுக்கவும் உறுதிமொழிகளை வழங்கவும் தமிழ் பொது வேட்பாளர் அவசியமானது என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பில், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விரிவாக்கம், மன்னார் பொது மருத்துவமனைக்கு வளங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டன.