“ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்று உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது” - எம்.ஏ.சுமந்திரன்,

 


 

“ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது” என்று தெரிவித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், “இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டிய தேவை எதுவும்இல்லை” என்றும் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சுமந்தின், “ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது” என்றும் சுட்டிக்காட்டினாா்.

“அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் இணக்கத்தோடுதான் அப்படியே அதை விட்டுவிட முடிவு எடுக்கப்பட்டது. அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை. ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம. இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப்பில் இருப்பதால் எந்தக் குழப்பமும் புதிதாக வந்துவிடாது” என்றும் சுமந்திரன் தெரிவித்தாா்.