(கல்லடி செய்தியாளர்)
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கரவை மு.தயாளனின்
கரும்பலகை (நாவல்) மற்றும் சிறுகதை மஞ்சரியின் 50 ஆவது இதழ் ஆகியவற்றின் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (15) வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி பிரதம விருந்தினராகவும்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இரா. முரளீஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர் பாரம்பரியத்தை வெளிக் கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில்,வரவேற்புரையையும் வெளியீட்டையும் மகுடம் வி.மைக்கல் கொலினும்,"கரும்பலகை" நாவல் அறிமுகவுரையினை இலக்கிய விமர்சகர் இரா.சிவலிங்கமும் அழகு தமிழில் நிகழ்த்தினர்.
இதன்போது வெளியீடு செய்யப்பட்ட "கரும்பலகை" - நாவல் மற்றும் "சிறுகதை மஞ்சரி"- 50 ஆவது இதழ் ஆகியவற்றின் முதல் பிரதிகளை மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி முன்னாள் முகாமையாளர் எஸ்.வி.சுவேந்திரன் மற்றும் மட்டக்களப்பு இலங்கை வங்கி முன்னாள் உதவி முகாமையாளர் மு.ஜெயரஞ்சன் ஆகியோர் நூலாசிரியர் மு.தயாளனிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
இதன்போது சிறுகதை மஞ்சரி தொடர்பாக அமரர் வ.அ.இராசரெத்தினத்தின் புதல்வி ஆசிரியை வசந்தி தயாபரன்,எழுத்தாளர் ச.மணிசேகரன்,கவிஞர் ஜிப்ரி ஹஷன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக நன்றியுரையை நூலாசிரியர் மு.தயாளன் ஆற்றினார்.
நிகழ்வுகளைத் தனது வசீகரக் குரலால் கவிஞர் அழகுதனு தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.