த.விமலானந்தராசா,
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவானது எதிர்வரும் 18.06.2024 செவ்வாய்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பித்து 22.06.2024 சனிக்கிழமை கல்யாணச்சடங்குவிழாவும் 20.06.2024 திங்கட்கிழமை பின்னிரவு வாழிபாடுதலுடன் சடங்குவிழா இனிதே நிறைவடையவுள்;ளது அந்த வகையில். மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங் கட்டு கண்ணகி அம்மன் ஆலயமும் கண்ணகி விழாவினையும் எடுத்து நோக்கினால்.
சிவபூமியாம் கடல்சூழ் இலங்கையின் ஆதவனின் வரவு காணும் கிழக்கு மாகாணத்தில் மீன் பாடும் தேனாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் தென்பால் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கே இந்து சமுத்திரமும் மேற்கே மீன்பாடும் வாவியும் வடக்கு தெற்குத் திசைகளில் கடல் நோக்கி ஓடும் நீரோடைகளாகிய தோணாக்களும் வயல் நிலம், மேட்டுநிலமென நீர் வளமும் நிலவளமும் அமைய பெற்று 'தேற்றா' என்றழைக்கப்படும் தீன் சுவைக் கனிகள் தரும் வாழைகளும், மற்றும் குளிர்தரு மரங்களாகிய 'தேற்றா' என்னும் மரங்களும் நிறைய பெற்றதுவும் தஞ்மென வந்தோரைத் தேற்றி ஆற்றி ஈவு இரக்கங் காட்டி ஆதரிக்கும் மக்கள் செறிந்து வாழும் (தேற்று,ஆற்று,ஈவு ஸ்ரீ தேற்றாற்றீவு தேற்றாத்தீவு) பெருவளவூராகிய தேனூர் எனும் தேற்றாத்தீவு கிராமத்தின் மத்தியிலே மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஓரமாக கோயில் கொண்டு பூலோக தெய்வம் கற்பின் அரசி கண்ணகி அம்மன் அருளாட்சி புரியும் திருத்தலமே மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயமாகும்.
இவ்வாலயம் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயம் எனப் பெயர் பெறுவதற்கு காரணம் இவ் ஆலயத்தின் அமைவிடமே ஆகும். தேற்றாத்தீவுக் கிராமத்தில் மிக உயரமான நிலப்பகுதி இதுவே ஆகும். 'பள்ளியங்கட்டு ' என்று சொல்லக்கூடிய அம்மன் அணையாகத் இத்தலப்பகுதி ஆரம்ப காலத்தில் காணப்பட்டதே இதற்கு காரணமாகும். இதனை விட 'வேலைக்காரங்கட்டு' 'சோதையன்கட்டு' போன்ற உயரமான மண் அணைக்கட்டு நிலப்பகுதிகளும் இன்றும் தேற்றாத்தீவில் உள்ளன. வெள்ளப்பெருக்கு காலங்களிலும் நீர் தேங்காத பள்ளியங்கட்டிலே வீற்றிருக்கும் கண்ணகி அம்மன் ஆலயம் ஓர் புராதன தனிக்கோயிலாகும். ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரையும் கிராமத்தின் மத்தியிலே கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் இந்து கலாசாரத் திணைக்களத்தினால் இந்து ஆலயங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போது ஆரம்பத்திலேயே பதிவு செய்யப்பட்ட புராதன தனிக்கோயிலாக விளங்குகிறது.
முதன் முறையாக கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கி.பி 178 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இமயத்தில் இருந்து கல் எடுத்து சிலை வடித்து தனது வஞ்சி மாநகரிலே கோவில் அமைத்து விழாக் கொண்டாடியதாகவும் இவ்விழாவிற்கு கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னும் சென்றிருந்ததாகவும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஊடாக அறிகின்றோம். செங்குட்டுவனின் நண்பனான அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த கஜபாகு மன்னன் தனது இலங்கையிலும் கண்ணகி விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அங்கிருந்து சந்தனக் கட்டையிலாலான கண்ணகி சிலையையும் காற்சிலம்பையும் ஒரு சந்தன பேழையில் வைத்து எடுத்து வந்து இலங்கையில் உள்ள முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கண்டி, கதிர்காமம் போன்ற இடங்களில் கண்ணகி வழிபாட்டையும் விழாவையும் தொடங்கி வைத்ததாகவும் அறிகின்றோம் அன்று கஜபாகு மன்னனால் கண்ணகிக்கு பிரகார ஊர்வலமாக எடுக்கப்பட்ட விழாவே இன்று பெரகரா என்று கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப காலத்தில் தோற்றம் பெற்ற கண்ணகி அம்மன் ஆலயங்களில் ஒன்றாக மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகிறது. இவ் ஆலயத்தை ஆரம்ப காலத்தில் திருப்பழுகாம், அம்பிளாந்துறை, கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம் மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை ஆகிய கிராம மக்கள் நிர்வகித்ததோடு சடங்கினையும் செய்து வந்தனர். செட்டிபாளையம் கண்ணகி அம்மனின் கிளை ஆலயங்கள் போன்று தத்தமது கிராமங்களிலும் கண்ணகிக்கு ஆலயம் அமைத்து வழிபாடியற்றினர். உதாரணமாக களுதாவளை கொம்புச்சந்தி எனும் இடத்திலும், தேற்றாத்தீவு பள்ளியங்கட்டிலும் அமைந்த ஆலயங்களை குறிப்பிடலாம். காலவோட்டத்தில் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தைத் தவிர்ந்த ஏனைய களுதாவளை கண்ணகி அம்மன், செட்டிபாளைய பிள்ளையார் ஆலயத்தின் பக்கத்தில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் போன்ற அனைத்து கண்ணகி ஆலயங்களும் மாரி அம்மனாக மாற்றம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறலாயின.
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தேற்றாத்தீவைச் சேர்ந்த கட்டாடிமாரே பூசைகளை நிகழ்த்தி வந்ததனாலும் தேற்றாத்தீவுக் கிராம மக்கள் ஒன்று கூடி திருக்கல்யாண சடங்கினை செட்டிபாளையம் கண்ணகி அம்மனுக்கு செய்து வந்ததோடு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததன் காரணமாகவும் 'வைகாசி திங்களில் வருவேனென்று வரிசைக்கியைந்து விடை கொடுத்தாரே' என்ற திருக்குளிர்த்தில் பாடலடிக்கு ஏற்ப கட்டாடியாரும் மக்களும் செட்டிபாளையம் கண்ணகிக்கு வைகாசிப் பூரணையை அண்டிய திங்கள் கிழமையை இறுதி நாளாகக் கொண்டு சடங்கினை நடத்தி விட்டு அடுத்த மாதம் ஆகிய ஆனி மாதத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிராமத்தை ஏழு தெருவாகப் பிரித்து தேற்றாத்தீவுப் பள்ளியங்கட்டில் கண்ணகிக்கு பெரு விழாக் கொண்டாடினர். காலப்போக்கில் ஆனி மாதப் பூரணையை அண்டிய திங்கட்கிழமையை இறுதி நாளாகக் கொண்டு ஏழு விழாவினை ஏழு தெருமக்களும் நடாத்தி வருகின்றனர். சேரனும் கஜபாகுவும் வைகாசியில் கண்ணகிக்கு விழாக் கொண்டாடவில்லை என்ற காரணத்தினாலும், விழா கொண்டாடுவதற்கு திதி நட்சத்திரங்கள் அவசியமில்லை என்பதாலும் கட்டாடியாரும் மக்களும் செட்டிபாளையம் கண்ணகிக்கு வைகாசியில் சடங்கு நடாத்தியதினாலும் ஆனி மாதத்திலே பெருவிழா தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகிக்கு நடைபெறலாயிற்று.
செட்டிபாளையம் கண்ணகிக்கு வைகாசித் திங்களில் 'வெப்புத்தணி வேகம் தணி' என்று கட்டாடியார் அம்மனை வேண்டி மண்றாட்டமாக சடங்கினை செய்து அருள் பெற்று அதன் பயனாக தமது சொந்த ஊராயாகிய தேற்றாத்தீவிலே அருள் தந்த கண்ணகிக்கு ஆனி மாதத்தில் நன்றிப் பெருவிழாவினை தானும் கிராம மக்களும் ஒன்றுகூடி நடத்தினர். இவ்வாலயத்தில் கண்ணகி வழக்குரை படிப்பதோ, திருக்குளிர்த்தில் பாடல் பாடுவதோ, திருக்குளிர்த்தில் ஆடுவதோ கிடையாது. மாறாக அருள் தந்த கண்ணகிக்கு நன்றிப் பெருவிழாவே நடைபெறுகிறது. கட்டாடியார் கண்ணகியின் அருளை நினைந்த்து கசிந்துருகிக் காவியம் பாடுவதும், வாழ்த்து பாடுவதும் விழா முடிவில் திருக்குளிர்த்திலுக்குப் பதிலாக வாழிப்பாடி முடிப்பதும் பன்னெடுங்காலம் முதல் இன்று வரையும் நடைபெற்று வருகிறது.
சேரன் செங்குட்டுவன் நடாத்திய விழாவைப் போன்றதாகவும் இலங்கையில் கஜபாகு மன்னன் எடுத்த விழாவை ஒத்ததாகவும் இங்கு விழா இடம் பெறுவதைக் காணலாம். கஜபாகு மன்னன் பல்வேறுபட்ட ஆடல்,பாடல் வாத்திய இசை போன்ற கலைநிகழ்ச்சிகளோடு கண்ணகியின் சிலையை சுற்றுப் பிரகாரமாக எடுத்து வந்து (பெரஹரா) கொண்டாடிய விழா மரபை இன்றும் சிங்கள மக்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர். இம் மரபை ஒட்டியதாகவே தேற்றாத்தீவு பள்ளியங் கட்டு கண்ணகி அம்மன் விழாவிலும் கண்ணகியின் திருவுருவப் படத்தினைத் தாங்கிய தோரணம் அமைக்கப்பட்டுவதும் அத்தோரணத்தில் 'அம்மன் விழா' எனவும் எத்தனையாம் தெரு எனவும் எழுதப்படடுட அலங்காரம் செய்யப்பட்டு ஏழு நாட்கள் ஊர்வலம் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தின் போது காவடி, கும்மி, கோலாட்டம் போன்ற நடனங்கள் ஆடப்பட்டும் வந்ததோடு இன்றும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் ஈறாகப் பக்தி பரவசத்தோடும் குதுகலத்தோடும் ஆடி வருவதையும் காணலாம்.
கண்ணகி வழிபாட்டம்சங்களில்; காவியம், அகவல் போன்ற இலக்கிய வகைகள் முதன்மை பெறுவது போன்று கொம்புமுறி விளையாட்டு, வசந்த்ன் கூத்து என்பனவும் முக்கியம் பெறுகின்றன. குறிப்பாக கொம்புமுறி என்பது கோவலனும் கண்ணகியும் கொழுக்கொம்பு கொண்டு பூப்பறிக்கும் போது இரண்டு கொம்புகளும் கொழுவிக் கொண்டதாகவும் இதனை விடுவிக்க முடியாது போனதால் கோவலன் பக்கம் சில ஆண்களும் (வடசேரி) கண்ணகி பக்கம் சில பெண்களும் (தென்சேரி) நின்று கொம்புகளை இழுத்த போது கோவலனின் கொம்பு உடைந்து கண்ணகியின் பக்கம் வெற்றியடைந்ததாகவும் இதனை ஒட்டியே கண்ணகி விழாவில் கொம்புமுறி விளையாட்டும் செய்யப்பட்டு வருவதை அறிகின்றோம். அந்த வகையில் முன்னைய காலத்தில் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகிக்கு ஆண்டுதோறும் கொம்புமுறி விளையாட்டு நடாத்தப்பட்டு வந்ததையும் பிற்பட்ட காலத்தில் கைவிடப்பட்டதையும் கிராம முதுசங்கங்கள் வாயிலாக அறின்றோம். இவ் விழா இங்கு நடைபெற்றதற்குச் சான்றாக 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு முந்திய காலப்பகுதியில் கொம்புமுறி விளையாட்டுக்காக நாட்டப்பட்ட மரம் இவ்வாலயத்துக்கு அருகாமையில் இருந்ததை சமகாலத்தில் வாழும் பலரும் அறிந்துள்ளனர். நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இவ் ஊரில் 2018ஆம் ஆண்டு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தின் தொட்டத்து வீதியில் மீண்டும் பிரம்மாண்ட விழாவாக நடாத்தப்பட்டமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வசந்தன் கூத்தும் கண்ணகி அம்மன் ஆலய வீதியில் விழாக்காலங்களில் சிறுவர்களால் ஆடப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். இவை மட்டுமன்றி அம்மனின் விழாக் காலங்களில் அம்மனின் தொட்டத்து மேடையில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும். இதுவே பின் நாட்களில் இக்கிராமம் கலை கிராமமாக உருவாக்கக் காரணமாயிற்று
தேற்றாத்தீவு கிராமத்தின் மத்தியில் பிரதான வீதி ஓரமாக ஆலமர நிழலில் வழிபடப்பட்ட தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயமும் பிற்காலத்தில் கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம் என பெயர் பெறுவதற்கும் இக் கொம்புமுறி விளையாட்டு நடைபெற்ற சந்தியில் இப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததே காரணமாயிற்று. இவ்வாறுபட்ட நீற்றுக் கட்டிடத்தைக் கொண்ட பழமைமிகு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தின் கருவறையில் ஆரம்ப காலத்தில் விக்கிரகம் ஏதும் இருக்கவில்லை. கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழமைமிகு பெட்டகத்தில் இருக்கும் கண்ணகி அம்மனின் புராதான கால முகக்களை பிள்ளையார் ஆலயத்திலே இருந்து எடுத்துவரப்பட்டு ஆலய கருவறையில் வைக்கப்பட்டு கதவு திறந்து முதல் நாள் விழா நடைபெறும். தொடர்ந்து ஏழு நாள் விழா முடிவில் மீண்டும் முகக்களையானது புராதன பெட்டகத்தில் வைக்கப்படும். இன்றும் இம் முகக்களை எடுத்து வந்து விழா நடாத்தும் மரபே உள்ளது. செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கட்டாடியாராக பல்லாண்டு காலம் இருந்து மறைந்த தேற்றாத்தீவை சேர்ந்த இளையதம்பிக் கட்டாடியாரின் பேரனாகிய ருதுகரன் கட்டாடியாரே இவ்வாலயத்தின் பிரதான கட்டாடியராகவும் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இணைக் கட்டாடியாராகவும் தற்போது உள்ளார்.
பேசும் தெய்வமான பள்ளியங்கட்டுக் கண்ணகி அம்மனிடம் அருள் பெற்ற அடியார்கள் ஏராளம். தற்போதும் சிங்கள் மக்கள் கூட இங்கு வருகை தந்து 'பத்தினி தெய்யோ' என்று வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.
அம்மனின் கும்பாபிஷேகத்தின் போதும் அம்மன் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். பழைய ஆலய கருவறையில் விக்கிரகம் ஏதும் இருக்காததினால் புதிய ஆலயத்தில் எவ்வாறு பட்ட விக்கிரகம் வைப்பது என்று ஆலய நிர்வாகிகள் குழம்பியிருந்த வேளையில் ஆலய நிர்வாகிகள் சிலரிடமும் ஆலய கட்டாடியரிடமும் ஒரே நாளில் ஒரே இரவில் அம்மன் கனவில் காட்சி அளித்து தமக்குத் தாமிர விக்கிரகமே வைக்குமாறு கூறிய அற்புதம் அதிசயிக்கத்தக்கது. அம்மனின் அருள்வாக்குக்கிணங்க தாமிர விக்ரம் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது விக்கிரகம் ஆலயத்திற்கு வந்து சேருவதற்கு முன் அதைப்பற்றி அறிந்திராத ஆலயத்தில் சிற்ப வேலைகளைச் செய்து கொண்டிருந்த சிற்பச்சாரி தான் செய்த ஒரு கண்ணகியின் சிற்பத்தை சுட்டிக் காட்டி அந்த சிற்பத்தை ஒத்த வடிவாகவே வரவுள்ள தமிர விக்ரம் இருப்பதாகவும் அம்மன் தனக்கு காட்சி தந்ததாக கூறினார் அவர் கூறியது உண்மை என்பதை மறுநாள் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த அம்மனின் தாமிர விக்கிரகம் உணர்த்தியமை யாவரையும் பிரமிக்க வைத்தது. கிழக்கு இலங்கை கண்ணகி இலக்கியங்களின் மிக பழைய காவியமான ஊர் சுற்று காவியத்தில் வரும் 'நீதி செறி தேற்றா என்னும் செட்டிபாளையம்' எனும் பாடல் அடி சான்று பகர்கின்றது என்று குறிப்பிட்டு கூறலாம்.