உணவு வழங்கும் திட்டத்தினால் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது .

 


 பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம், பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது.

கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.