டிட்வா சூறாவளியினால் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், நிலவும் கடும் மழை காரணமாக
கேகாலை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கைகள்
தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் காணாமல்
போனவர்களைத் தேடும் பணிகள் மழை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக
மாவட்டச் செயலாளர் தேசப்பிரிய பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வார
இறுதியில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக சுமார் 40 அடி
உயரத்திற்கு மணல் மேடுகள் உருவாகியுள்ளதால், இயந்திரங்களைப் பயன்படுத்தித்
தேடுதல் நடத்துவதில் பெரும் சிரமம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் ரம்பொடை போன்ற
பகுதிகளில் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் ஏனைய இடங்களில்
தொடர்கின்றன. கடந்த வார இறுதியில் தலையற்ற நிலையில் உடலம் ஒன்று
மீட்கப்பட்டுள்ளது.
சூறாவளி தாக்கி ஒரு மாதத்திற்கும்
மேலாகியுள்ளதால், இனிவரும் காலங்களில் மீட்கப்படும் உடலங்களை அடையாளம்
காண்பது கடினமாக இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்
தற்போதைய தரவுகளின்படி, டிட்வா அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 648 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 174 பேர் இன்னும் காணாமல் போனவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.





