கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதிக்கு காத்தான்குடி சிவில் சமுகம் வரவேற்பு.
















கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. குலதுங்கவிற்கு காத்தான்குடி சிவில் சமுக அமைப்பாகிய பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் விசேட வரவேற்பு இன்று (13) காலை வழங்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர்  பொறியியலாளர் ஏ.எம்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் மாலை அனிவித்தது வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதிக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையடல் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சம்மேளனத்தின் செயற்பாடுகள், அதன் நோக்கு இலக்குகள் மற்றும் சமயங்களுக்கிடையிலான சகவாழ்விற்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ. உவைசினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அவற்றுக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதிக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் காத்தான்குடி சிவில் அமைப்பினர் இணைந்து பொன்னாடை பொற்றி நினைவுச் சின்னம் ஒன்றினை வழங்கி கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடசே துஆப் பிரார்த்தனையிலும் கிழக்கு மாகாண புதிய கட்டளை தளபதி கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு கல்லடி 243வது இராணுவ முகாம் காலாட்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள், சம்மேளன சிரேஸ்ட உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.