28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
28 வருடங்களுக்குப் பின்னர், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடலுக்கு கீழ் பயன்படுத்தப்படும் கேபிள் இணைப்புகளுக்கு சட்டவிதிகள் இருக்கவில்லை. அதற்கான சட்டவிதிகளை இந்த சட்ட மூலத்தின் மூலம் சமர்பிக்க முடிந்துள்ளது.
அனைத்து விதமான சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 74 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனவே தேசிய சைபர் பாதுகாப்பு சட்டம் அவசியப்படுகின்றது. அதன்படி, இந்த சட்டத்தை இம்மாதம் வரைய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.





