நூற்றாண்டை காணும் சுவாமி விபுலாநந்தரின் கல்லடி விஜயமும், ராமகிருஷ்ண மிஷனும், சிவாநந்த வித்தியாலயமும். (மணித்துளிகள்).

 






 பிரபா பாரதி

ஓலைக் குடிசையில் குடியிருக்கும் பேச்சித்தாயார் தனது தெய்வத்திருமகன்
ராமகிருஷ்ண பரமகம்சரை தன் அருகில் அழைத்து வரவேண்டும்  என்றும். பெரும் விருட்சமான   ஆங்கில கல்வி சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கடாட்சத்தையும்  வழங்கினாள்.

• 1925 ராமகிருஷ்ண மிஷனில் சங்கமித்து மிஷன் மேற்கொள்ளும் ஆன்மீக
கல்விப் பணிகளை ஒழுங்கமைத்து கொண்டிருந்த சுவாமி விபுலாநந்தரை தனது
வளாகத்திற்கு அழைத்து வந்து, ஆண்கள் ஆங்கில பாடசாலை ஒன்றை
ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆலய தர்மகர்த்தா
K.O வேலுப்பிள்ளை அவர்களின் மனதில் பேச்சித்தாயார் தோற்றம் பெற
வைத்து சுவாமி அவர்களை கல்லடி பிரதேசத்திற்கு வருமாறு அழைப்பை
விடுக்க வைத்தாள்.

• 10.04.1925 கல்லடி இறங்கு துறையிலிருந்து பெரு வரவேற்பாக இரட்டை குதிரை
பூட்டிய வண்டியில் ஊர்வலமாக பேச்சித்தாயாரின் வளாகத்திற்கு சுவாமி
அழைத்து வரப்பட்டு வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

• நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஆலய தர்மகர்த்தா சுவாமி அவர்களிடம்
ஆண்கள் ஆங்கில பாடசாலை ஸ்தாபிப்பு பற்றிய
அவசியத்தை முன் வைத்தார்.

• இதனை ஏற்றுக்கொண்ட சுவாமி விபுலாநந்தர் விசாலமான நில, நிதி, ஆசிரியர்
வளங்கள் இன்றியமையாதது, இவற்றை பெறுவதற்கு ஒழுங்குகள் செய்து
பாடசாலையை ஸ்தாபித்து ஒப்படைக்கும் பட்சத்தில் அப்பணியை தொடர
முடியும் என்ற கருத்தை தெரிவித்தார்.

• இப்பொறுப்பை தான் முழுமையாக ஏற்பதாகவும் சகல வளங்களையும் பெற்று
தருவதாகவும் பிரதேச மக்களின் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் என்ற
உறுதிமொழியை சுவாமிக்கு வழங்கினார்.

• 26.11.1925 ஆம் ஆண்டு சிவாநந்தா வித்தியாலயத்தின் ஆரம்ப கட்டிடத்திற்கான
பிரதான கற்கள் சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் இருந்து
எடுத்துச் செல்லப்பட்டு ஆலய தர்மகர்த்தாக்கு சொந்தமான ஒரு ஏக்கர்
காணியில் சுவாமி  விபுலாநந்தரின்  திருக்கரத்தால் அடிக்கல் நடப்பட்டது.

• 25.4.1928 ஆம் ஆண்டு அன்றைய தினம் பேச்சித்தாயாரின் கடாட்சம் நிறைந்த
நாள், 2809 இலக்க சாசனம் மூலம் ஆலய தர்மகத்தாவினால் இராமகிருஷ்ண
மிஷனுக்கு சுவாமி விபுலாநந்தர் ஊடாக சிவாநந்தா ஆரம்ப கட்டிடமும் ஒரு
ஏக்கர் நிலமும்((K.O.V க்குரியது), தற்போது மைதானம், விடுதி அமைந்துள்ள
09 ஏக்கர் நிலமும் (K.O.V க்குரியது), தற்போது சிவபுரி, சுவாமி விபுலானந்த
மணி மண்டபம், சுவாமி விபுலாநந்தர் சமாதி, பாலர் பாடசாலை அமைந்துள்ள
04 ஏக்கர் பிரிபடா நிலம் (K.O.V,நொத்தாரிஸ் நல்லதம்பி ஆகியோருக்குரியது),
அத்துடன் 1912 ஆம் ஆண்டு தற்போதைய விவேகானந்தா வித்தியாலய
அபிவிருத்திக்காக கதிர்காமத் தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார்   ஆகியோர் வைப்பிலிட்ட ரூபாய் 5000 பணத்துடன் அவர்களால் தாபிக்கப்பட்ட
மேற்படி கல்லூரியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வே
இராமகிருஷ்ணன் மிஷன் கல்லடி பிரதேசத்தில் அமைய ஏதுவாக அமைந்தது..

 • 15.4.1929 ஆம் ஆண்டு சிவாநந்தா வித்தியாலயம் எனும் ஆங்கில பாடசாலை
சுவாமியினால் திறந்து வைக்கப்பட்டது. இராமகிருஷ்ண பாரம்பரியத்துடன் மிசன்    துறவிகளின் ஆசியுடனும் அவர்களது ஓயாத உழைப்பாலும் தியாகத்துடனும்     இப் பாடசாலையை கட்டி எழுப்பி பயன்மிகு சமுதாயம் ஒன்றுக்கு  உயிரும்   உருவும் கொடுத்த பெருமிதம் இராமகிருஷ்ண மிஷனுக்கும், சுவாமி    விபுலானந்தருக்கும் மிஷன் துறவிகளுக்குமே சார்ந்தது.

• 26.11.1929 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார் பண்ணையில்
அமைந்திருந்த வெள்ளிக்கிழமை மடத்தில் இயங்கிய இராமகிருஷ்ண மாணவரில்ல மாணவர்களை சுவாமி அழைத்து வந்து சிவாநந்தா ஆரம்ப
கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

• மட்டக்களப்பில் தற்போதைய ஆனைப்பந்தி பாடசாலையில் இயங்கிய
இராமகிருஷ்ண மிஷன் அலுவலகப் பணிகள் சிவாநந்தா வித்யாலயத்தில்
ஆரம்ப கட்டிடத்திற்கு சுவாமிகளால் மாற்றப்பட்டது.

• மாணவர்கள் தொகை அதிகரித்து இடப்பற்றாக்குறை நிலை ஏற்பட்ட சமயம்
ஆலய தர்மகர்த்தா தனது வீடுகளில் ஒன்றான 'ராஜ்மஹால்' இல்லத்தை சுவாமி
விபுலாநந்தரும், ஆசிரியர்கள் சிலரும் மாணவர்கள் தங்குவதற்கும் கொடுத்து
உதவினார்..


• 12.5.1932 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மிஷனுக்கு சிவாநந்தா ஆரம்ப
கட்டிடத்திற்கு அருகாமையில் அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட
காணியின் ஒரு பகுதியில் சிவாலயம் என்ற கட்டிடம் அமைக்கப்பட்டு
இராமகிருஷ்ண மிஷன் செயற்பாடுகள், மாணவரில்லம் என்பன இடம்பெயர்ந்தது.

• 1934 ஆம் ஆண்டு பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரம கம்ஷரின்
வணக்க சிலையுடனான பூஜை மண்டபம் அமைக்கப்பட்டது;

• 1940 ஆம் ஆண்டு சிவபுரியும் கட்டி முடிக்கப்பட்டது..

• 19.07.1947 ஆம் ஆண்டு சுவாமி இறைப்பதம் எய்தினார். சுவாமி தெரிவித்த
விருப்பத்தின்படி ஆலய தர்மகத்தா தலைமையிலான குழுவினர் இராமகிருஷ்ண   மிஷனுடன் கலந்துரையாடி அனுமதி பெற்று சிவபுரி வளாகத்தில் சுவாமியை   சமாதி வைத்தனர்.

சுவாமியால் கல்லடி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராமகிருஷ்ண மிஷன்
மூலம் இறையாசி பெற்ற மிஷன் துறவிகளின் திருப்பாதங்கள் பட்டு ஆசி பெற்ற
மண்ணாக கல்லடி பிரதேசம் மிளிர்கிறது. அவர்களின் வழிகாட்டல் தூய சேவை
மூலம் மக்கள் பல நன்மைகளை பெற்று வருகின்றனர்.

சமய,கலாச்சார, பண்புகளுடனான மாணவ தலைமுறைகள் உருவாக்கப்பட்டு
ஆங்கில கல்வியில் புலமை பெற்று, ஒவ்வொரு தமிழ் பேசும் கிராமங்களிலும்
கல்விமான்கள் உருவாகி பெருமை சேர்த்து நிற்பது, சுவாமி அவர்களால்
ஆரம்பிக்கப்பட்ட இராமகிருஷ்ணன் மிஷன் துறவிகளின் ஆசியும்  அவர்களின்
அர்ப்பணிப்பான கல்வி சேவையும், சிவாநந்தா வித்தியாலயமும் என்றால் அது
மிகையாகாது முத்தமிழ் வித்தகர் தமிழ் உலகத்தின் மகா இறை சொத்து.