40 வருட காலம் கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்றார் ஆசிரியை திருமதி சரஸ்வதிதேவி கௌரிகாந்தன்!



(கல்லடி செய்தியாளர்)

பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய திருமதி சரஸ்வதிதேவி கௌரிகாந்தன்40 வருட கல்விப் பணியில் இருந்து இன்று ஓய்வு பெற்றார்.

கடந்த 40 வருடக் கல்விப் பணியில் சற்றும் தளராது ஆரம்பக் கல்வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தியாக சிந்தனையுடன் பணியாற்றி,அரச பணியில் இருந்து ஓய்வு பெறும் இவர் மட்டக்களப்பு மாவட்டம மாத்திரமன்றி பொலநறுவை மாவட்டத்திலும் தனது கல்விப் பணியினை மேற்கொண்டிருந்தார்.

எங்கெல்லாம் தனது பணி இருந்ததோ அங்கெல்லாம் மாணவர்களின் நலன்சார்ந்து செயற்பட்ட ஒரு சிறந்த ஆரம்பக் கல்வி ஆசிரியாவார்.

மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி தொடக்கம் சாதாரண தரம் வரை பயின்று பாடசாலை வரலாற்றில் முதல் சாதாரண தரத்திற்கு தோற்றிய மாணவர்களுள் ஒருவராகத் தோற்றி சித்தியடைந்து உயர்தரம் பயில்வதற்காக மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இணைந்து கொண்டு உயர்தரத்தில் சித்திபெற்றார்.

இந்நிலையில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஆரம்பக் கல்வி ஆசிரியராகத் தெரிவானார்.

அவருக்கு முதல் நியமனம் பொலநறுவை மாவட்டத்தின் முத்துக்கல் தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றக் கிடைத்தது. பின்னர் தனது பணியில் தேரச்சி பெறும் நோக்கில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 1987/1988 கல்வியாண்டில் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக மீண்டும் முத்துக்கல் தமிழ் வித்தியாலயத்தில் நியமிக்கப்பட்டார்.
 
தொடர்ந்து பிறந்த ஊரான மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயம், மட்/பட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலயம், மட்/பட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம், மட்/மட்/குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயம், ஓய்வு பெறும் வரை மட்/பட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திலும் தனது பணியினை மேற்கொண்டார்.

பணிக் காலத்தில் பகுதித் தலைவர், உப அதிபர் பணிகளை மேற்கொண்டு பாடசாலை நிருவாகக் கடமைகளில் ஈடுபட்டார். அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தி அதிகமான மாணவர்களை சித்தி பெறவும் வழிசமைத்தார்.