நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார்.
ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 ரூபா பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.





