ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகள் தொடர்பில் பல அரசியல் கட்சிகளுக்கு இடையில் பாரிய போட்டிகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு பல கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், வேட்பாளர் பதவிகள் தொடர்பில் அந்தந்த கட்சிகளுக்குள்ளேயே குழு பிளவு ஏற்பட்டுள்ளமையே இந்த முரண்பாடான சூழலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏற்கெனவே விருப்பம்
தெரிவித்துள்ளதாகவும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி
ஜயசேகரவும், கட்சி ஆதரவளித்தால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என
அண்மையில் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களின் கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்தால் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிட தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் வடமாகாண முன்னாள்
முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்தார். ஆனால் தமிழ் தேசிய
கூட்டமைப்பு உட்பட பல அரசியல் கட்சிகள் அவருக்கு வேட்பாளர் பதவியை வழங்க
தயாராக இல்லை என அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்ட சில பெயர்களில் பிரபல கோடீஸ்வரரும் பிரபல கோடீஸ்வர வர்த்தகருமான தம்மிக்க பெரேராவின் பெயரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திரு.தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஆவார்.





