மட்டக்களப்பில் தற்போதைய அனர்த்த நிலை தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராய்வு!


























(கல்லடி செய்தியாளர்)

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பருவப் பெயர்ச்சிக் காலநிலை தொடர்பாகவும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும்  இனிவரும் காலங்களில் மக்களையும் விவசாய நடவடிக்கைகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது சம்பந்தமாகவும் அதற்கு அரச திணைக் களங்களின்  எவ்வாறு திட்டமிடுவது சம்பந்தமாகவும் இன்றுவெள்ளிக்கிழமை(12) மாவட்ட செயலகத்தில் விஷேட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் மாவட்டத்தின் வெள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடிகான் அமைப்பு செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான நிதி தேவையும் நமது மாவட்டத்தில் உள்ளது. இதனை கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயல்பட வேண்டிள்ளது.  எமது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 5100 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது பயிர்ச் செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது பிரிவிலுள்ள சமநல சேவை திணைக்களத்திற்கு வந்து பாதிப்புகளை பதிய வேண்டும். விவரங்களை அப்போது அவர்களுக்குரிய விவசாய காப்பறுதி. காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தினரின் உதவியுடன் மாணவர்கள் உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். வாகரைப் பிரதேசத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவும் உதவி புரிந்துள்ளனர்.

 வெள்ள அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளை செய்ய தயாரான நிலையில் உள்ளனர்.

 எதிர்காலத்தில் மாவட்டத்தில் எதிர்நோக்கப்படும் வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்கும் முகமாக இனங்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு புதிய திட்டத்தை வகுத்து மக்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரன் தெரிவித்தார்.