பாவனையாளர்களுக்கு பொருத்தமான விலையில் அவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் விலை நிர்ணயங்களை மேற்கொள்வதுடன், கட்டுப்பாட்டு விலைகளையும் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு அவை தொடர்பான கண்காணிப்புக்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ஊடாக மேற்கொண்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளீதரனின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கு அமைவாக பொருத்தமான விலையில் மக்கள் தரமானதும் தமக்கு அவசியமான பொருட்கள் நுகரப்படுவதை மாவட்ட பாவனையாளர் அதிகாரசபை அலுவலகம் அவதானித்து வருகின்றது.
அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2023 ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 1200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி என். முஹம்மத் சப்றாஸ் தெரிவித்தார்.
அவற்றில் 920 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் மட்டக்களப்பு, ஏறாவூர், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, வாகரை ஆகிய நீதவான் நீதி மன்றங்களில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான சுற்றிவளைப்புக்களினால் 12,454,050 ரூபா தண்டப்பணம் அறவிறப்பட்டுள்ளதாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலை நிர்ணயம், விலையினைக் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமையும் காட்சிப்படுத்தியமையும், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யாது மறுத்தமை மற்றும் பதுக்கியமை, மின் மற்றும் இலத்திரனியல் சாதனப் பொருட்களுக்கு கட்டுறுத்து காலம் (Warranty )வழங்காமை, பொருட்களை விற்பனை செய்யும் போது முறையான பற்றுச்சீட்டு விநியோகிக்காமை, பொருட்களின் முறையான விபரணமின்றி (Label ) விற்பனை செய்தமை போன்ற காரணங்கள் இச்சுற்றிவளைப்புககளின்; போது அதிகாரசபையினால் கண்டறியப்பட்டன.
இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்த வெற் வரியினைக் காரணம் காட்டி, விலைகளை அதிகரித்து, போலி விலையில் பொருட்களின் விற்பனைகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து, கண்டறிவதற்காக தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட பொறுப்பதிகாரி என். முஹம்மத் சப்றாஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.