-(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பில் பிறந்து தொழில் நிமிர்த்தம் தென்னிந்தியா சென்று சினிமாத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய இயக்குனர் பாலு மகேந்திராவைக் கௌரவிக்கும் வகையிலான "வேல்ஸ் விருது விழா" எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு மட்டக்களப்பு தேவாநாயகம் கலையரங்கில் இடம்பெறவுள்ளதாக நடனக் இயக்குனர் எஸ்.கிருஸ்ணா தெரிவித்தார்.
வேல் விருது விழா தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வூடகச் சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.
அவர் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-
வேல்ஸ் டான்ஸ் ஸ்ரூடியோ கம்பனியால் ஜனவரி 20 ஆம் திகதி பாலு மகேந்திராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்விருதுக்காக இலங்கை பூராகவுமிருந்து 50 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு மகுடம் சூட்டும் விழாவாக இது அமையவுள்ளது.
இவ்விருது விழாவில் கலைஞர்கள் பல்துறை சார்ந்து தேர்வாகியுள்ளனர். இவ்விருது விழா வருடா வருடம் எமது அமைப்பால் தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படும்.
இந்நிலையில் இது யாரிடமிருந்து எதுவித பணமும் பெறப்படாது எமது அமைப்பால் முற்று முழுதாக இலவசமாகவே நடத்தப்படுகிறது.
எனவே இந்நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டு விருது பெறும் கலைஞர்களை வாழ்த்த வருமாறு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.






