நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 61 அகதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

 


உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகிறது. இந் நிலையில் லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர்.

இந்நிலையில், திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால், படகில் இருந்த சிலர் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றனர்.

எனினும், அகதிகளில் 61 பேர் நீரில் மூழ்கி விட்டனர் என லிபியாவில் உள்ள சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இத்தாலி நாட்டின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்வதற்கான முக்கிய புறப்படும் இடங்களாக லிபியா மற்றும் துனீசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளில் இருந்தும் 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்கு நடப்பு ஆண்டில் வருகை தந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவிக்கின்றது.