பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரது எண்ணிக்கையை 1 இலட்சமாக குறைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இது ஒருபோதும் சாத்தியமாகாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பொருளாதார பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை
பொருத்தாமல் இருக்க முடியாது.எனவே பாதுகாப்புக்கு அதிக நிதி
ஒதுக்கப்பட்டேயாகவேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு-
செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது.
ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமது குறுகிய தேவைகளுக்காக தேசிய
பாதுகாப்பினை பலவீனப்படுத்தின.இதன் பெறுபேறு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு
தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறையில் முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு 423 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை விட இம்முறை 12 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவத்துக்கு 218 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி
ஒதுக்குவது அவசியமற்றது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.பொருளாதார
பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தாமல்
இருக்க முடியாது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரது எண்ணிக்கை திடீரென
குறைவடைந்துள்ளது.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 2 இலட்சமாக காணப்பட்ட
இராணுவத்தினரது எண்ணிக்கை தற்போது 1,53, 000 ஆக உள்ளது..பொருளாதார
பாதிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரது எண்ணிக்கையை 1 இலட்சமாக குறைப்பதாக
அரசாங்கம் குறிப்பிடுகிறது.இது ஒருபோதும் சாத்தியமாகாது .





