சர்வதேச கண்டல் தினத்தையொட்டி கண்டல் தாவரங்கள் நடும் வைபவம் நடைபெற்றது.

 

 


 சர்வதேச  கண்டல் தினத்தையொட்டி  அக்கரைப்பற்று வட்டார வன  இலாகா  காரியாலயத்தினால், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அண்டிய பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் நடும் வைபவம்  செவ்வாய்கிழமை (01) நடைபெற்றது.

 அக்கரைப்பற்று வன இலாகா பிராந்திய வன அதிகாரி ஏ.எல்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கோணாவத்தை ஆற்றை அழகு படுத்தும் நோக்கில் இரு மருங்கிலும்  கண்டல் தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

“எமது நாட்டைப் பொறுத்த வரை மக்கள் இயற்கையை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுவந்துள்ளார்கள். இதனால் நாம் நாளாந்தம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களை எதிர் கொண்டவர்களாக இருக்கின்றோம். சூழலை பாதுகாப்பது ஒரு நாட்டில் வாழும் பிரஜையின் கடமையாகும். எமது நாட்டின் சூழலை பாதுகாத்து எதிர்கால சந்ததினருக்கு சிறந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.

எமது பிரதேசத்தில் சட்டவிரோத காடழிப்பு, சமூக விரோத செயல்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் எமது பிரதேசத்தின் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு நாம் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென்றார்.