மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு!!


கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (01) மாலை மட்டக்களப்பு தனியார் சுற்றுலா விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையேற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்தடவையாக களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதன் மூலம் மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான கருத்துக்களை ஊடகவியலாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதும் மக்களின் பிரச்சினைகளை இனங்கானவும்  புதிய பொருளாதார ரீதியான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தவும் அதற்கான விழிப்பூட்டல்களை மக்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுடன் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆளுநரினால் விஷேட கவனஞ்செலுத்தப்பட்டது.

ஆளுநரின் நிலையான மக்கள் நல வேலைத்திட்டங்களை வரவேற்ற ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தமது பங்களிப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

இதன் போது மாகாணத்தின் புதிய ஆளுநரை வரவேற்று தொடர்ந்தும் இன, மத வேறுபாடின்றி தமது மக்கள் பணியினைத் தொடர வேண்டுமென வாழ்த்திப் பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சார்பாக ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிகழ்வில் அரச தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பொறுப்பதிகாரி வி.ஜிவானந்தன் மற்றும் சிரேஷ்ட,  இளம் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.