தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் எஸ்டபியுஆர்டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் கருத்துப்பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.
நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன்.
உண்மையை சொல்லியாகவேண்டும்.
ஆம், ஏன் அவர் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்தார்? அரசியல் சந்தர்ப்பவாதம் அரசியல் ரீதியில் பிரபலமாவது – உண்மையில் எனக்கு தெரியாது.
ஆனால் இந்த நபர் தெரிவிப்பது உண்மை.
அது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என சுனேத்திரா தெரிவித்துள்ளார்.
இதற்கு சமூக ஊடகங்களில் பராட்டுக்கள் வெளியாகியுள்ளன.
உண்மையை சொன்னதற்கு நன்றி சுனேத்திரா என பதிவிட்டுள்ள ஒருவர் குறுகிய அரசியல் இலாபங்களிற்காக மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் கதையாடல்களிற்கு பதில் பதில் நாட்டின் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாக செயற்பட்டால் நாங்கள் எவரும் தடுத்துநிறுத்த முடியாத தேசமாக காணப்பட்டிருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.