உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்ட தொகுதிக்கு அப்பால் இடமாற்றங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமைகள் கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய தற்போது கால வரையறையின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையால் , அவர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்கள் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்களில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.