பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில், சிலர் எதிர்வரும் நோன்பு பெரு நாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்ய பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இந்த மோதல் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4 பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது