தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்கிற பைபிள், தேடுங்கள் கிடைக்கும் என்றும் சொல்லத் தவறவில்லை. தேடல் இன்றி அடைதல் இல்லையென்பதால், மனித வாழ்வில் தேடல் என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது உண்மைதான்.
சாம்பவி வேணுகோபால் என்பவர் இந்தத் தேடல் பற்றிய எழுதிய சில வரிகளை இங்கே நினைவுகூரலாம்
தண்ணீரைத் தேடும் தாவரங்கள்
மரத்தைத் தேடும் பறவைகள்
உணவைத் தேடும் உயிர்கள்
அன்பைத் தேடும் மனிதர்கள்
மனிதத்தைத் தேடும் மனங்கள்
என்று வரிசைப்படுத்தி விட்டு முடிவில் இவையெல்லாம்
முடிவிலிகள் என்று முடிக்கிறார். சுருங்கச் சொல்வதானால் வாழக்கைதான் தேடல். தேடல்தான் வாழ்க்கை. கணனி மயமாகி விட்ட இன்றைய உலகில் கூகிள் தேடு இயந்திரத்தில் தினசரி எத்தனை இலட்சம் தேடுதல்கள் இடம்பெறுகின்றன என்று நம்மால் கணக்கெடுக்க முடியுமா? எதற்கெடுத்தாலும் “கூகுளில் தட்டிப் பார்ப்பது நம் வழமையாகி விட்டது. கூகிளும் மனம் சலிக்காமல், பல மொழிகளில், எத்தனை தடவைகள் கேட்டாலும் தேடித் தருகிறது..
முதலாளி எப்பொழுதுமே தனக்கு விசுவாசமான தொழிலாளிகளைத் தேடுகிறார். தொழில் செய்பவரோ தன் கல்விக்கேற்ப, தன் திறமைக்கேற்ற ஒரு தொழிலைத் தேடுகிறார். விவசாயி தன் உற்பத்தியை நல்ல விலைக்கு வாங்கும் ஒருவரைத் தேடுகிறார். கல்யாண வயதை எட்டிவிட்ட பிள்ளைக்கு நல்ல வரன் தேடுவதில் பெற்றோர்கள் முனைகின்றார்கள். செய்திகளைத் தேடுகிறான் பத்திரிகையாளன். ..வாடிக்கையாளர்களைத் தேடுகிறான் வியாபாரி. பரம்பொருளை எல்லோருமே தேடுகிறோம். இப்படியே தேடுதல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திடீரென விழித்துக் கொள்ளும் குழந்தை, பக்க்தில் தாயைத் தேடுகிறது…
.தேடுதல்கள் வாழ்க்கையில் முற்றுப் பெறுவதில்லை. எனவே தேடுதலற்ற மனிதன் இங்கே யாருமில்லை
“தொலைந்த பின்பு ஆரம்பிக்கும் , தேடல்கள் தொலையும் முன்பு ஆரம்பித்திருந்தால், தொலைத்திருக்க வாய்ப்பில்லை நேசிப்பவர்களை.”
“தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்...”!