கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ரிதிதென்னை கிராமத்தின் 32 வருட வரலாற்றில் முதன்முதலாவதாக பொது வாசிகசாலை இன்று 19.12.2022ம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச மக்களின் நன்மைகருதி பொதுமக்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையிலும் பிரதேச மக்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால் இப்பொது வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக வாகரை பிரதேச சபையின் தவிசாளர் கண்ணப்பன் கணேஷன் கலந்து கொண்டு பொது வாசிகசாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் ஏனைய அதிதிகளாக ரிதிதென்னை இக்ரஃ வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் பிரதேச பள்ளிவாயல்களின் நிருவாக சபையினர், பேஷ் இமாம்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 32 வருடங்களாக இக்கிராமத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட நிலையில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தொடர்ச்சியாக பிரதேச சபை அமர்வுகளில் விடுத்த அழுத்தங்கள், கோரிக்கைகளின் பயனாக இது இன்று சாத்தியாமகியுள்ளது.
இதற்கான அனுமதி, ஒத்துழைப்புக்களை வழங்கிய சபையின் தவிசாளர், சபையின் செயலாளர், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர் அனைவருக்கும் பிரதேச மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.